TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 541
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
தொடர் வகைகள் : தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
செய்தித் தொடர் : ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
வினாத்தொடர் : ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும் (எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விழைவுத் தொடர் : ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) இளமையில் கல் (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக.(வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக. (வைதல்)
உணர்ச்சித் தொடர் : உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.) அட்டா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை)
ஆ! புலி வருகிறது! (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே! (வியப்பு)
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் : ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் என்பதை அறிந்தோம். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் என்பதையும் அறிவோம்.
பால் பருகினான். வெண்முத்து.
என்னும் தொடர்களைப் பாருங்கள். இவை பாலைப் பருகினான், வெண்மையான முத்து என்னும் பொருள்களைத் தருகின்றன. முதல் தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபும் அடுத்த தொடரில் ‘மை’ என்னும் விகுதியும் ‘ஆன’ என்னும் உருபும் மறைந்து நின்று பொருள் உணர்த்துகின்றன.
இவ்வாறு இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர்.
இத்தொகைநிலைத் தொடர்
1. வேற்றுமைத் தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகை
வேற்றுமைத்தொகை : திருக்குறள் படித்தாள்.
இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது. இரு சொற்களுக்கும் இடையில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
1. திருவாசகம் படித்தான் – (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
2. தலைவணங்கு – (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை
3. சிதம்பரம் சென்றான் – (கு) நான்காம் வேற்றுமைத்தொகை
4. மலைவீழ் அருவி – (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
5. கம்பர் பாடல் – (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை
6. மலைக்குகை – (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை
உருபும் பயனும் உடன்தொக்க தொகை : பணப்பை – இது பணத்தைக் கொண்ட பை என விரிந்து பொருள் தருகிறது. பணம், பை என்னும் இரு சொற்களுக்கு இடையில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபும் ‘கொண்ட’ என்னும் சொல்லும் (உருபின் பயன்) மறைந்து வந்துள்ளன.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை எனப்படும்.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(எ.கா.) பால் குடம் – (பாலைக் கொண்ட குடம்)
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(எ.கா.) பொற்சிலை – (பொன்னால் ஆகிய சிலை)
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(எ.கா.) மாட்டுக் கொட்டகை – (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை)
வினைத்தொகை : ஆடுகொடி, வளர்தமிழ் – இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன. அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன. மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி எனவும் வளர்ந்த தமிழ், வளர்கின்ற தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன.
இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – ( நன்னூல் 364)
பண்புத்தொகை : வெண்ணிலவு, கருங்குவளை – இத்தொடர்களில் வெண்மை, கருமை என்னும் பண்புகள் நிலவு, குவளை என்னும் பெயர்ச்சொற்களைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
இவ்வாறு பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை : பனைமரம் – இத்தொடர் பனையாகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர். பனை என்பது மரங்களுள் ஒன்றனைக் குறிக்கும் சிறப்புப்பெயர். இவ்வாறு சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.
உவமைத்தொகை : மலர்விழி – இத்தொடர் மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது. மலர் -உவமை, விழி – உவமேயம். இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
உம்மைத்தொகை : இரவுபகல், தாய்தந்தை – இத்தொடர்கள் இரவும் பகலும் தாயும் தந்தையும் என விரிந்து பொருள் தருகின்றன. இதில் சொற்களின் இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.
அன்மொழித்தொகை : பொற்றொடி வந்தாள். (தொடி-வளையல்) – இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது. இதில் ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
இவ்வாறு வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.
தொகாநிலைத் தொடர் : ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் தொகாநிலைத் தொடர் என்பர்.
1. எழுவாய்த் தொடர் 2. விளித்தொடர் 3. வினைமுற்றுத் தொடர்
4. பெயரெச்சத் தொடர் 5. வினையெச்சத் தொடர்
6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் 7. இடைச்சொல் தொடர்
8. உரிச்சொல் தொடர் 9. அடுக்குத்தொடர்.
1. எழுவாய்த் தொடர் : (எ.கா.) மல்லிகை மலர்ந்தது. -இதில் ‘மல்லிகை’ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘மலர்ந்தது’ என்னும் பயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இஃது எழுவாய்த் தொடர் ஆகும்.
2. விளித்தொடர் : (எ.கா.) நண்பா படி. – இதில் ‘நண்பா’ என்னும் விளிப்பெயர் ‘படி’ என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் ஆகும்.
3. வினைமுற்றுத் தொடர் : (எ.கா.) சென்றனர் வீரர். – இதில் ‘சென்றனர்’ என்னும் வினைமுற்று ‘வீரர்’ என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
4. பெயரெச்சத் தொடர் : (எ.கா.) வரைந்த ஓவியம். – இதில் ‘வரைந்த’ என்னும் எச்சவினை ‘ஓவியம்’ என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் ஆகும்.
5. வினையெச்சத் தொடர் : (எ.கா.) தேடிப் பார்த்தான். – இதில் ‘தேடி’ என்னும் வினையெச்சச் சொல் ‘பார்த்தான்’ என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினையெச்சத் தொடர் ஆகும்.
6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் : (எ.கா.) கவிதையை எழுதினார். – இதில் -இதில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துவதால் இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.
7. இடைச்சொல் தொடர் : (எ.கா.) மற்றுப் பிற (மற்று + பிற) – இதில் ‘மற்று’ என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது இடைச்சொல் தொடர் ஆகும்.
8. உரிச்சொல் தொடர் : (எ.கா.) சாலவும் நன்று. – இதில் ‘சால’ என்னும் உரிச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது உரிச்சொல் தொடர் ஆகும்.
9. அடுக்குத்தொடர் : (எ.கா.) நன்று நன்று நன்று – இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இஃது அடுக்குத்தொடர் ஆகும்.
ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.
அவை 1. எழுவாய் 2.பயனிலை 3. செயப்படுபொருள்
ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.
(எ.கா.) நீலன் பாடத்தைப் படித்தான்.
பாரி யார்?
புலி ஒரு விலங்கு.
இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.
ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
கரிகாலன் யார்?
கரிகாலன் ஒரு மன்னன்.
இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.
யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள். (எ.கா.) நான் கவிதையைப் படித்தேன்.
என் புத்தகத்தை எடுத்தது யார்?
நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.
இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படு பொருள்கள்.
மூவிடம் : இடம் மூன்று வகைப்படும். அவை 1. தன்மை 2. முன்னிலை 3. படர்க்கை.
தன்னைக் குறிப்பது தன்மை.
(எ.கா.) நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.
முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.
(எ.கா.) நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.
தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.
(எ.கா.) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.
அடுக்குத்தொடர் : சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அமுதன் திடீரென, பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே? என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவனருகே ஓடிவந்தனர். “இல்லை இல்லை. சும்மாதான் சொன்னேன்” என்று சொல்லிச் சிரித்தபடியே ஓடினான் அமுதன். “அவனைப் பிடி பிடி பிடி பிடி” என்று கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.
இப்பகுதியில் சில சொற்கள் இரண்டு, மூன்று, நான்கு முறை இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர். அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.
அடுக்குத்தொடர் இரட்டைக்கிளவி – ஒப்பீடு : அடுக்குத்தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்குப் பொருள் உண்டு. இரட்டைக் கிளவியைப் பிரித்தால் அது பொருள் தருவதில்லை.
அடுக்குத்தொடரில் ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும். இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்.
அடுக்குத்தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். இரட்டைக்கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும்.
அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்.
தொடரியல் – ஓர் அறிமுகம் : சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர். தொடரமைப்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றை ஆராய்வது தொடரியல். தொடரியலின் சிறப்பு, ஒரு மொழியின் வளத்தைக் காண உதவுகிறது. ஒரு மொழியில் சொற்களும் அவற்றின் பொருள்களும் காலந்தோறும் சிறிது வேறுபடக் காணலாம். ஆனால், சொற்றொடர் அமைப்பில் பெரும் மாறுதல் ஏற்படுவதில்லை. அவ்வாறு மாறுதல் ஏற்படினும், அம்மொழியின் அடிப்படை இயல்புக்கு மாறாக அமைவதில்லை. ஆதலால், சொற்றொடர் அமைப்பு ஒன்றே அம்மொழியின் தனிச்சிறப்புகளை உணர்த்த வல்லதாய் உள்ளது.
தொல்காப்பியம் காட்டும் தொடரமைப்புகள் : நாம் பிறரிடம் பேசும்போது, தொடர்களாகத்தான் பேசுகிறோம். நாம் பயன்படுத்தும் தொடர்களில் இயல்பாகவே இலக்கணக்கூறுகள் அமைந்துள்ளன. அவற்றைத் தொல்காப்பியம் சில நூற்பாக்களில் சுட்டிக்காட்டியுள்ளது. தொடரமைப்புகள், பின்வரும் தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்குவதற்கான எடுத்துக்காட்டுகள், இலக்கியத்திலிருந்தும் அத்தகைய நடைமுறை வழக்கிலிருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.
· தொடரில் சொற்கள் அமைந்துவரும் நிலை
· திணை – பால் – எண் – தொடர்ப்பொருத்தம்
· ஒரு சொல் அல்லது தொடர் அடுக்கி வருதல்
· ஒரு தொடரை அடிப்படையாகக்கொண்டு செருகலும் விரித்தலும்
· தொடரில் முன் பின் மாற்றம்
· ஒரு தொடரை இரு வகையாக விளக்குதல்
· இலக்கணக்கூறு நோக்கில் மாற்றம் – தோன்றா எழுவாய்
· தொடரமைப்பில் ஆகுபெயர்
தொடரில் சொற்கள் அமைந்துவரும் நிலை : கண்ணன் வந்தான்; அவன் கடிதம் கொண்டு வந்தான். இங்குக் கண்ணன் என்பது, இயற்பெயர்; அவன் என்பது, சுட்டுப்பெயர். இவ்வாறு இயற்பெயரையுடைய ஒரு தொடரும், அதற்குரிய சுட்டுப்பெயரையுடைய மற்றொரு தொடரும் வரும்போது, அவை, அடுத்தடுத்து வருதல் வேண்டுமெனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
திணை- பால் – எண் தொடர்ப் பொருத்தம் : ஒரு தொடரிலுள்ள எழுவாய், அதன் பயனிலையோடு திணை, பால், ஆகியவற்றில் ஒத்திருத்தல் வேண்டும். அவ்வாறு வருவது, தொடர்ப் பொருத்தம் ஆகும். இதனைக் கீழ்க்காணும் பட்டியல்வழிப் புரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தொடர்களில், எழுவாய்ப் பெயரின்திணை-பால், வினைமுற்றின் திணை- பால் ஆகியன ஒத்திருக்கின்றன. இவைபோன்று தொடர்கள் அமைதல் வேண்டும். தம் மரபில் மயங்கி வருதல் கூடாது. இதனை,
‘வினையில் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரில் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே’
(தொல். சொல். கிளவி. 11)
எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
சில தொடர்களில், இருதிணைக்குரிய எழுவாய் விரவி வரும்போது, அத்தொடருக்குரிய பயனிலை எத்திணைக்குரிய முடிவு பெறும் என்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். கீழ்க்காணும் தொடரைக் காணுங்கள். சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுங்கள்.
மன்னனும் நால்வகைப் படைகளும் விரைவாக முன்னேறிச் —————- (சென்றார்கள் / சென்றன)
விடை காண முடிந்ததா? இத்தொடரில், உயர்திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் கலந்து வந்து ஒரு முடிவினைக் கொள்ளும்போது, அவை சிறப்பை நோக்கினால் உயர்திணையிலும், இழிவை நோக்கினால் அஃறிணையிலும் முடியும். ஆகவே, இத்தொடர் சிறப்பு நோக்கி மன்னனும் நால்வகைப்படைகளும் விரைவாக முன்னேறிச் சென்றார்கள் என உயர்திணை முடிவு பெறும். மேலும் சில தொடர்கள்:
· மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. (இழிவு நோக்கி அஃறிணை முடிபு)
· இடையனும் ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் சென்றன. (அஃறிணை எழுவாய் மிகுதி)
· ஆசிரியர்கள், மாணாக்கர்கள், கல்வி அலுவலர், தலைமையாசிரியர், நூல்கள் இப்பள்ளியில் இருக்கிறார்கள். (உயர்திணை எழுவாய் மிகுதி)
எனவேதான், திணை – பால் – எண் ஆகியவற்றிற்கேற்பத் தொடர்ப் பொருத்தம் அமைவது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
வழுநிலை : ஒரு தொடரில் திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று மாறுபட்டு, முன்நின்ற சொல்லுக்கு ஏற்றவாறு அமையாமல் இலக்கணக் குற்றம் தோன்ற வருவது வழுநிலை. வினா, விடை, மரபு ஆகியன இடம்பெறும் தொடரிலும் வழு தோன்றும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியன இடம்பெறும் தொடரில் வழு வருமிடங்களும் உள்ளன. வழு – குற்றம் / பிழை
வழாநிலை : மணிமாலா பாடினாள் என்னும் தொடரில் இலக்கணக் குற்றமில்லை. இது வழாநிலைத் தொடராகும். ‘மணிமாலா’ என்னும் உயர்திணைப் பெண்பாற் பெயர், ‘ஆடினாள்’ என்னும் உயர்திணைப் பெண்பாற் விகுதியைப் பெற்று முடிந்துள்ளது. ஆகவே, நம் முன்னோர் எச்சொல்லை எப்பொருளால் குறித்தனரோ, அச்சொல்லை, அப்பொருளிலேயே தொன்றுதொட்டு வழு இல்லாமல் கூறுவதே வழாநிலை. (இலக்கணக் குற்றமில்லாத நிலை)
வழுவமைதி : பசுவைப் பார்த்து, “என் அம்மை வந்தாள்” எனக் கூறுவது உண்டு. பசு என்பது, அஃறிணையாயினும், அன்பு மிகுதியால் உயர்திணைக்குரிய பெயரைப் பெற்றுள்ளது. இத்தொடர், இலக்கணக் குற்றமுடையதாயினும் சான்றோரால் ஏற்றுக்கொள்ளப் பெற்றமையால் வழுவமைதி ஆயிற்று. இலட்சுமி எனப் பசுவைப் பெயரிட்டு அழைப்பது, ஆண் குழந்தையைப் பெண் குழந்தையைக் குறிக்கும் சொல்லாலும் (வாடி கண்ணே) பெண் குழந்தையை ஆண் குழந்தையைக் குறிக்கும் சொல்லாலும் (வாடா செல்லம்) கூறுவனவெல்லாம் வழுவமைதிகளே. இன்றைய நடைமுறைப் பேச்சில், இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களுக்குள் எதிர்பாலினரைக் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்துவதனைக் காணலாம். ஆகவே மொழி என்பது, இலக்கண வரம்புக்கு உட்பட்டதாயினும் சிலபோது விதிமீறல், வரம்பு மீறல் ஆகியன ஏற்படுகின்றன. அவை ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு இலக்கண நூலார் வகுத்ததே வழுவமைதியாம். காவிரி பொங்கி வருகிறாள் – இத்தொடர் வழுவமைதியா? காரணம் கூறுக.
வழு வருமிடங்கள் :
எழுத்து வழு – திருகுறள் (ஒற்று மிகுத்து எழுதாமை.)
சொல் வழு – நான் சிரித்தான் (நான் சிரித்தேன் என எழுதாமை)
பொருள் வழு – கடற்கரையை உடைய வெற்பனே (நெய்தல் நிலத்திற்குரிய தலைவனைக் குறிக்காமல், குறிஞ்சி நிலத் தலைவனைக் குறித்தது).
யாப்பு வழு – ‘வரிவளைக்கைத் திருநுதலாள். . .’ (வெண்பாவில் கலித்தளை மயங்குதல் காய்முன் நிரை)
அணி வழு – ‘இலங்கு வளை அன்ன நலங்கேழ் ஆம்பல் . . .’ (வெள்ளாம்பல் பூவைச் சங்குக்கு உவமையாகக் கூறுதல் பொருத்தமில்லாதது.)
ஒரு சொல் அல்லது தொடர் அடுக்கி வரும் முறை : அடுக்கு என்பது, மீண்டும் மீண்டும் வருவதை அடிப்படையாகக் கொண்டது. அது சொல் நிலையிலும் தொடர் நிலையிலும் அமைந்து வரும்.
1. சொல் நிலையில் அடுக்குமுறை : ஒரு சொல் அடுக்கி வருவதற்கு எடுத்துக்காட்டாக,
ஏஏ இஃதொத்தன் – இசைநிறை
என்ன என்ன – அசைநிலை
வருக வருக – பொருளொடு புணர்தல் ஆகியவற்றைக் கூறலாம்.
இசைநிறை, செய்யுளில் வரும் எனக் குறிப்பிட்டாலும், பேச்சு வழக்கிலும் வருமென்பதை மறுத்தல் இயலாது.
எ.கா. போ, போ என் கண்முன் நில்லாதே,
‘இசைநிறை அசைநிலை பொருளொடு
புணர்தலென்(று)
அவைமூன் றுஎன்ப ஒருசொல் அடுக்கே’
(தொல். சொல்.எச்சம். 411)
என்னும் நூற்பாவின்வழி, சொல் அடுக்கி வருவதை அறியலாம்.
2. தொடர் நிலையில் அடுக்குமுறை : தொடர் நிலையில், வினையெச்சங்கள், வினைமுற்றுகள், வேற்றுமையுருபுகள் ஆகியன அடுக்கி வரும்.
அ) வினையெச்சங்கள் அடுக்கி வருதல்: ஒரு தொடரில் பல வினையெச்சங்கள் அடுக்கி வருவதும் உண்டு.
எ.கா. நான் ஊருக்குச் சென்று, பெற்றோரைப் பார்த்து, அவர்களுடன் உரையாடி, அறுசுவை உணவு உண்டு, எனது கல்லூரி விடுதிக்குத் திரும்பி வந்தேன்.
‘பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே’
(தொல். சொல். வினை. 233)
ஆ) வினைமுற்றுகள் அடுக்கி வருதல் : ஒரு தொடரில் பல வினைமுற்றுகள் அடுக்கி வந்தாலும் அவை ஒரு பெயரைக்கொண்டு முடிதல் வேண்டுமெனத் தொல்காப்பியம் கூறுகிறது.
எ.கா. வந்தாள், பார்த்தாள், மகிழ்ந்தாள் மலர்க்கொடி.
‘அவைதாம்
தத்தம் கிளவி அடுக்குந வரினும்
எத்திறத் தானும் பெயர்முடி பினவே’
(தொல். சொல். எச்சம். 429)
இ) வேற்றுமையுருபுகள் அடுக்கி வருதல்: ஒரு தொடரில் பல உருபுகள் அடுக்கி வந்தாலும், பொருள் உணர்த்தும்வகையில், முடிக்கும் சொல்லால் அமையும்.
எ.கா. பூனைக்குக் கிண்ணத்தில் பாலை ஊற்றி வைத்தான்.
இத்தொடரில் முறையே நான்காம், ஏழாம், இரண்டாம் வேற்றுமையுருபுகள் வந்துள்ளன.
ஈ) அடை, சினை, முதல் அடுக்கி வருதல்: வண்ணச் சினைச் சொல்
செங்கால் நாரை இத்தொடர், செம்மை + கால் + நாரை எனப் பிரியும். இத்தொடரில், அடையைக் (பண்பைக்) குறிக்கும் செம்மை என்னும் சொல் முதலிலும், சினையைக் (உறுப்பைக்) குறிக்கும் சொல் இரண்டாவதாகவும், முதலைக் (எழுவாயைக்) குறிக்கும் சொல் மூன்றாவதாகவும் வந்துள்ளன. கரிகால் வளவன், செங்கண் செழியன், மைவிழி மாதவி எனப் பெயர்கள் அமைந்துள்ளமையைக் காணலாம்.பேச்சுவழக்கில் அழுமூஞ்சிப் பாப்பா, சுருட்டைத்தலப் பையன் என வருவனவும் வண்ணச் சினைச் சொற்களே. இவ்வாறு அடை, சினை, முதல் ஆகியன மயங்காது முறையாக அடுக்கி வருவதனை,
‘அடைசினை முதலென முறைமூன்றும் மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்’
(தொல். சொல்.கிளவி. 26)
எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
ஒரு தொடரை அடிப்படையாகக்கொண்டு இடைச்செருகலும் விரித்தலும்
ஒரு தொடரில் பெயரெச்ச, வினையெச்சங்கள், தாம் முடிக்கும் சொல்லுக்குமுன் இடையில் வேறு சொற்களும் வரலாம்.இவ்வாறு வரும் சொல்லை இடைநிலை எனத் தொல்காப்பியர் குறித்துள்ளார். மொழியியலார், இடைச்செருகல் எனக் குறிப்பிடுகின்றனர்.
1. பெயரெச்சத் தொடரில் இடைநிலையாக (செருகலாக) வரும் சொல்
ஆடிய மயில் – ஆடிய அழகான மயில் (அழகான என்பது இடைச்செருகல்)
கிடைத்த நூல் – கிடைத்த அரிய நூல் (அரிய என்பது இடைச்செருகல்)
2.வினையெச்சத் தொடரில் இடைநிலையாக (செருகலாக) வரும் சொல்
படித்துக் கூறினான் – படித்துப் பொருள் கூறினான். (பொருள் என்பது இடைச்செருகல்)
உழுது வந்தான் – உழுது ஏரோடு வந்தான். (ஏரோடு என்பது இடைச்செருகல்)
இக்கருத்தைப் பின்வரும் நூற்பா குறிப்பிடுகிறது.
தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச்சொல் ஆயினும் இடைநிலை வரையார்’
(தொல். சொல்.வினை. 237)
(சிவணும் – பொருந்தும், வரையார் – நீக்கார்.)
‘அறத்தை அரசன் விரும்பினான்’ எனவும் ‘உண்டது பசித்த யானை’ எனவும் வரும் தொடர்களில், முறையே வேற்றுமையுருபும் முற்றுவினையும் அமைந்துள்ளன. அரசன், பசித்த என்னும் பிற சொற்கள் அவற்றோடு பொருந்தி வந்துள்ளன. இவ்வாறு பிற சொற்கள் நிற்றலை ‘இடைப்பிறவரல்’ என்பர். இதனை,
‘உருபு முற்று ஈரெச்சம் கொள்ளும்
பெயர்வினை இடைப்பிற வரலுமாம் ஏற்பன’ என நன்னூல் குறிப்பிடுகிறது.
இடைச்செருகலாக வந்த சொற்கள், பின்னாளில் பெயரடை, வினையடைகளாகத் தொடர்களில் அமைந்தன. சிலபோது, அடைகளாகப் பொருந்தி வரும் சில தொடர்களில், பொருள் மயக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாகப் புதிய மாணாக்கர் விடுதி என்னும் தொடரில், மாணாக்கர் என்னும் சொல் இடைச்செருகலாக வரும்போது, மாணாக்கர் புதியவரா, விடுதி புதியதா என்பதில் பொருள் மயக்கம் ஏற்படுகிறது.
புதிய மாணாக்கர் எனப் பொருள் கொள்ளும்போது, மாணாக்கர்தாம் புதியவர். புதிய என்னும் அடைமொழி, மாணாக்கருக்குத் தாம் பொருந்தியுள்ளது. புதிய விடுதி எனப் பொருள் கொள்ளும்போது, விடுதிதான் புதியது.
புதிய என்னும் அடைமொழி, விடுதிக்குத்தான் பொருந்தியுள்ளது. ஆகவே, இவ்வாறு வரும் தொடர்களைக் கண்டறிந்து, பொருள் மயக்கமின்றி எழுதுதல் வேண்டும்.
பெயரடையும் வினையடையும் அமைந்த தொடர்கள் : பெயரைச் சிறப்பித்து வருவது, பெயரடை. வினையைச் சிறப்பித்து வருவது, வினையடை.
நாம் பேசும்போது, இவைபோன்ற தொடர்களை மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். ஒரு நாள் முழுவதும், நீங்கள் பேசிய தொடர்களில் இடம்பெற்ற பெயரடை, வினையடைகளைப் பாருங்கள். நாம் இத்தனை சொற்களைப் பயன்படுத்தினோமா! என வியப்படைவீர்கள்.
ஒரு தொடரை இருவகையாக விளக்குதல்: குறிப்பிட்ட ஒரு தொடரை இருவகையாக விளக்குவது குறித்தும் தொல்காப்பியர், சில நூற்பாக்களில் கூறியுள்ளார்.
(எ.கா.) புலி கொல் யானை. இத்தொடர் இருவகையில் பொருள் மாற்றமுடையதாக அமையும். புலியைக் கொன்ற யானை எனவும் புலியால் கொல்லப்பட்ட யானை எனவும் இரு மாறுபட்ட பொருளைத் தருகின்றது. இங்கு வினைமுதல் மாறுவதற்கேற்ப, வினை வடிவம் மாறுகிறது. இதனைத்,
தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடிநிலை இலவே பொருள்வயி னான’
(தொல். சொல். வேற். மயங்கியல் 95)
என்னும் நூற்பா விளக்குகிறது. ஆகவே, தொடரில் பொருள் மயக்கம் தோன்றாத வகையில் ஏற்புடைய வேற்றுமையுருபுகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.
தொடரில் முன் பின் மாற்றம் : ஒரு தொடரில் வேற்றுமையுருபு முன் பின்னாக வரும். அதாவது, தொடரின் இடையிலும் வரும், இறுதியிலும் வரும்.
எ.கா. உழுதான் வயலை (தொடரின் இறுதியில் ஐ உருபு வந்தது)
கணினியை இயக்கினான் (தொடரின் இடையில் ஐ உருபு வந்தது)
தமிழில் தொடரியலைவிட உருபனியல் கட்டமைப்புடன் விளங்குகிறது. தொடரியல் அமைப்பு, நெகிழ்வுத் தன்மை கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, வைகறைச்செல்வி பாடம் படித்தாள் என்னும் தொடரைக் காண்போம்.
· வைகறைச்செல்வி படித்தாள் பாடம்
· படித்தாள் வைகறைச்செல்வி பாடம்
· படித்தாள் பாடம் வைகறைச்செல்வி
· பாடம் வைகறைச்செல்வி படித்தாள்
· பாடம் படித்தாள் வைகறைச்செல்வி
மேற்கண்ட தொடர் நெகிழ்வுத் தன்மைகொண்டுள்ளதனை அறியலாம். இதுபோலச் சில தொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகியவற்றை இடம் மாற்றியமைத்தாலும் பொருள் மயக்கம் ஏற்படாது.
ஆங்கிலத்தில் தொடரியல் அமைப்பு, நெகிழ்வுத்தன்மை கொண்டதன்று. அம்மொழியில், ஒரு தொடரிலுள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றை இடம் மாற்றினால், பொருளும் மாறுபடும். (எ.கா.) The cat killed the rat.
தமிழில், உருபனியல் அமைப்புடைய தொடரில், சொற்கள் இடம் மாறினால், பொருள் மயக்கம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, பொன்மணி பாடலைப் பாடினாள் என்னும் தொடரைக் காண்போம்.
பொன்மணி ஐ பாடல் பாடினாள் (வேற்றுமையுருபு ஐ இடம் மாறியுள்ளது) என்று மாற்றியமைத்தால், பொருள் மயக்கம் ஏற்படுகிறது. ஆகவே, தொடரியல் அமைப்பைவிட உருபனியல் அமைப்பு, கட்டமைப்பு உடையது என உணரலாம்
இலக்கணக்கூறு நோக்கில் மாற்றம் தோன்றா எழுவாய் : இலக்கணக்கூற்றின் அடிப்படையிலும் தொடரில் மாற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாகத் திண்ணை மெழுகிற்று என்னும் தொடரைக் கூறலாம். இத்தொடரில் எழுவாய் இல்லை. ஆயினும், இத்தொடரிலுள்ள செயப்படுபொருளே (திண்ணை) எழுவாயாக வந்துள்ளது.
உண்மையில், நான் திண்ணையை மெழுகினேன் என்பதே சொல்லப்பட வேண்டிய தொடர். ஆனால், திண்ணை மெழுகிற்று எனக் கூறும்போது, நான் என்னும் எழுவாய் வெளிப்படையாக இல்லை. எழுவாய் மறைந்து வருவதனால், அதனைத் தோன்றா எழுவாய் எனக் குறிப்பர்.
மேலும், திண்ணை மெழுகப்பட்டது எனச் செயப்பாட்டு வினைத்தொடராக அமையும்போது, திண்ணை என்பது, எழுவாயாக அமைகிறது. ஆகவே, செயப்பாட்டு வினை இல்லாமலே செயப்படுபொருள், எழுவாயாக வரும் என்பதைத் திண்ணை மெழுகிற்று என்னும் தொடர் விளக்குகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: முள் குத்திற்று, வாள் வெட்டிற்று, எழுதுகோல் எழுதிற்று, கல் தடுக்கிற்று ஆகியனவற்றைக் கூறலாம். இக்கருத்தைச்
‘செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே’
(தொல். சொல். வினை 246)
என்னும் நூற்பா விளக்குகிறது. இதன் வாயிலாகத் தொல்காப்பியர், தொடரில் ஏற்படும் மாற்றங்களை இலக்கணக் கூற்றின் அடிப்படையில் விளக்க முடியும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் இதுபோலத் தொடர் வருவதுண்டு.
Peter opened the door. (With Subject)
The door was opened. (Without Subject)
தோன்றாச் செயப்படுபொருள் : ஒரு தொடரில் செயப்படுபொருள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். அவ்வாறு மறைந்து வருவது தோன்றாச் செயப்படுபொருள். நான் படித்தேன் என்னும் தொடரில், பாடம் என்னும் செயப்படுபொருள் வெளிப்படையாகத் தோன்றவில்லை. நான் ஆடினேன் என்னும் தொடரிலும் நடனம் என்னும் செயப்படுபொருள் வெளிப்படையாகத் தோன்றவில்லை. இத்தொடர்களில் படித்தேன், ஆடினேன் என்னும் வினைமுற்றுகளே செயப்படுபொருளை உணர்த்திவிடுகின்றன.
தோன்றாப் பயனிலை : ஒரு தொடரில் பயனிலை வெளிப்படையாக வரவில்லையெனில், அதனைத் தோன்றாப் பயனிலை என்பர்.
· எனக்குப் பசி (இருக்கிறது)
· எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு கோவில் (இருக்கிறது)
என்னும் தொடர்களில், இருக்கிறது என்னும் பயனிலை வெளிப்படையாகத் தோன்றவில்லை. இவ்வினைமுற்று, தோன்றாப் பயனிலையாகும்.
முக்காலத்துக்கும் பொருத்தமுடைய வினைமுற்று: முக்காலத்தும் இருக்கும் ஒரு பொருளை விளக்கும்போது, அத்தொடரின் வினைமுற்று, செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைதல் வேண்டும் என வினையியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக,
· நீர் குளிரும்
· மலை நிற்கும்
· ஞாயிறு தோன்றும்
· ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும்
· நூலகம் காலை ஒன்பது மணிக்குத் திறக்கும்
ஆகிய தொடர்களைக் கூறலாம். இவையனைத்தும் செய்யும் என்னும் வாய்பாட்டால் அமைந்துள்ளன. இதுபோல் ஆங்கிலத்திலும் உண்டு. (எ.கா.) The Sun rises in the east.
முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லு நிகழும் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்
(தொல்.வினை. 240)
தெரிநிலை வினைமுற்று : வினைமுற்றுச் சொற்கள் தெரிநிலை, குறிப்பு என இருவகைப்படும். ஒரு செயலைத் தெளிவாகத் தெரிவிக்கும் வினை, தெரிநிலை வினைமுற்று. இவ்வினைமுற்றின் விகுதியானது திணை, பால், எண், இடம் ஆகியவற்றையும் உணர்த்துகிறது. எடுத்துக்காட்டாக, நடந்தான் என்னும் வினைமுற்றில் உயர்திணை(திணை), ஆண்பால்(பால்), ஒருமை (எண்), படர்க்கை(இடம்) ஆகியன உள்ளன. இஃது, இறந்தகாலத்தையும் குறிக்கிறது; செய்பவன், கருவி, காலம், நிலம், செயல், செய்பொருள் ஆகிய ஆறனையும் வெளிப்படையாக உணர்த்துகிறது.
எழுதினாள் – இவ்வினைமுற்று மேற்கூறிய ஆறனையும் வெளிப்படுத்துகிறதா? கண்டறிக.
குறிப்பு வினைமுற்று : செயல் செய்பவரை வெளிப்படையாகக் காட்டிச் செயலையும் காலத்தையும் குறிப்பாகத் தெரிவித்து நிற்கும் வினைச்சொல்லே குறிப்பு வினைமுற்று. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப் பெயரின் அடியாகக் குறிப்புவினை தோன்றும். இவன் பொன்னன் என்பது, பொன்னை உடையவனாக இருந்தான், இருக்கிறான், இருப்பான் எனப் பொருளுணர்த்திச் செயலையும் காலத்தையும் குறிப்பாகவும் செயல் செய்பவனை வெளிப்படையாகவும் கூறுகிறது.
தொடரமைப்பில் ஆகுபெயர் : நாம் பேசும்போது, இயல்பாகவே நம்மையறியாமல் இலக்கணக்கூறுகளைப் பயன்படுத்திப் பேசுகிறோம். எடுத்துக்காட்டாக ஆகுபெயரைக் கூறலாம். கீழ்க்காணும் உரையாடல்களைப் படித்துப்பாருங்கள். அவற்றுள் ஆகுபெயர் இடம்பெற்றுள்ளதனை அறிந்துகொள்வீர்கள்.
(வீட்டில்…) அம்மா: கண்ணா, பள்ளிக்கு நேரமாகவில்லையா?
கண்ணன் : அம்மா, இன்று பள்ளிக்கு விடுமுறை.
(பேருந்து நிறுத்தத்தில்…) ஒருவர் : ஐயா, 47 சென்றுவிட்டதா?
மற்றொருவர் : இன்னும் வரவில்லை. (பேருந்தில்…)
நடத்துநர்: காந்தி மண்டபம் யாரு? இறங்குங்க.
(அலுவலகத்தில்…) மேலாளர்: அந்த நீலச்சட்டை இன்னும் வரவில்லையா?
(பள்ளியில்…) முகிலன்: மதி, பாரதியாரைப் படித்துவிட்டாயா?
மதியழகன் : ஓ! படித்துவிட்டேனே!
மேற்கண்ட உரையாடல்களில், பள்ளிக்கு விடுமுறை என்பது, பள்ளியைக் குறிக்காமல், அங்குப் படிக்கும் மாணாக்கருக்கு விடுமுறை என்பதனைக் குறிக்கிறது. இஃது, இடவாகுபெயர். இதுபோலவே மற்ற தொடர்களிலுள்ள ஆகுபெயர்களையும் கண்டறியுங்கள்.
ஆகுபெயர் என்பது, ஒரு பொருளின் இயற்பெயர், அதனைக் குறிக்காமல் அதனொடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகி வருவதாகும். ஆகுபெயர் குறித்தும் அதன் வகைகள் குறித்தும் ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள். அவற்றை நினைவு கூருங்கள்.
தமிழில் ஆகுபெயர், தொடரியல் இலக்கணத்துடன் தொடர்புடையதாக உள்ளது. பெயர்கள் தொடரிலிருந்து வருவிக்கப்படுவதனால், அவற்றை வேற்றுமை மயங்கியலில் தொல்காப்பியர் அமைத்துள்ளார்.
பலவகைத் தொடர்கள்: இன்றைய வழக்கில், நாம் பேச்சிலும் எழுத்திலும் பலவகைத் தொடர்களைப் பயன்படுத்துகிறோம். செய்தித்தொடர், வினாத்தொடர், கட்டளைத்தொடர், உணர்ச்சித் தொடர் ஆகியன நாம் படிக்கும் நாளிதழ், வார, மாத இதழ்கள், விளம்பரம், அறிவிப்பு ஆகியவற்றிலும் இடம்பெறுகின்றன. அவற்றைப் படித்துப் பார்ப்பதுடன் இருந்துவிடாமல், அவற்றின் தொடரமைப்பை அறிந்துகொள்ளவும், பிழை கண்டறிந்து திருத்தவும் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.
தொடர் வகையும் தொடரமைப்பும் : தொடர்கள், கருத்தை வெளிப்படுத்தும் வகையில் நால்வகையாக அமைந்து வருவதனை ஏற்கெனவே படித்திருப்பீர்கள். அவற்றை மீண்டும் நினைவுகூர்வோமா?
தொடர்வகைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகளைக் கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.
தொடரமைப்புகள்: தொடரமைப்புகளுள் சிலவற்றைத் தனிநிலை, தொடர்நிலை, கலவைத் தொடர்கள் என ஆங்கில இலக்கண அமைப்பையொற்றிக் கூறுகின்றனர். அத்தகைய அமைப்புடைய தொடர்கள், பெரும்பான்மையாகக் கதை, கட்டுரைகளில் இடம்பெறுகின்றன.
தனிநிலைத் தொடர்: கண்மணி நாளிதழ் படிக்கிறாள். (ஓர் எழுவாய், ஒரு பயனிலை)
கண்மணி நாளிதழையும், வளவன் வார இதழையும், முருகன் மாத இதழையும் படிக்கின்றனர். (பல எழுவாய்கள், ஒரே பயனிலை)
தொடர்நிலைத் தொடர் : நான் நன்றாகப் பொருளுணர்ந்து படித்தேன்; அதனால், தேர்வில் முதலிடம் பெற்றேன். (ஒரே எழுவாய், பல பயனிலைகள்)
நான் என்பது எழுவாய். படித்தேன், பெற்றேன் என்பன பயனிலைகள். அதனால் என்பது, இணைப்புச்சொல்.
இவ்வாறு, ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்கள், அதனால், ஆகையால், ஏனெனில், ஏனென்றால் முதலான இணைப்புச் சொற்களால் இணைக்கப்பட்டு வருவதும், ஓர் எழுவாய், பல பயனிலைகளைக்கொண்டு முடிவதும் தொடர்நிலைத் தொடர்களாகும்.
கலவைத்தொடர்: தமிழில் பிழையின்றி எழுத வேண்டுமெனில், நல்ல தமிழ்நூல்களைப் படிக்க வேண்டும் என்னும் தொடரில், நல்ல தமிழ்நூல்களைப் படிக்க வேண்டும் என்பது, முதன்மைத் தொடர். தமிழில் பிழையின்றி எழுத வேண்டுமெனில் என்பது, சார்புத் தொடர். இவ்வாறு, பல தொடர்கள் கலந்து ஒரே தொடராக வருவது கலவைத் தொடராகும். ஒரு தொடரை மற்றொரு தொடராக மாற்றுதல்
ஒரு தொடரை மற்றொரு தொடராக மாற்றும் பயிற்சியைக் கீழ்வகுப்புகளிலேயே மேற்கொண்டுள்ளோம். அவ்வாறு மாற்றம் பெறும் தொடர்களை வினை மாற்றம், கூற்று மாற்றம், ஒரு தொடரைப் பல்வகையாக மாற்றுதல் எனப் பகுத்துக் காணலாம்.
வினை மாற்றம்: ஒரு தொடரை மற்றொரு தொடராக மாற்றும்போது, பெயர்ச்சொற்கள் மாற்றம் அடைவதில்லை. வினைச்சொற்களே மாற்றம் அடைகின்றன.
• செய்வினை – செயப்பாட்டு வினை
பூங்குழலி யாழ் மீட்டினாள் செய்வினைத்தொடர்
யாழ் பூங்குழலியால் மீட்டப்பட்டது . செயப்பாட்டு வினைத் தொடர்
தன்வினை – பிறவினை
தமிழழகன் கல்வி கற்றான் – தன்வினை தமிழழகன் கல்வி கற்பித்தான் – பிறவினை
உடன்பாட்டு வினை – எதிர்மறை வினை
கலைச்செல்வி நேற்று வந்தாள் உடன்பாட்டு வினை
கலைச்செல்வி நேற்று வந்திலள் எதிர்மறை வினை
இன்றைய வழக்கில், இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தொடர்களில் எதிர்மறைப் பொருளை உணர்த்த இல்லை என்னும் சொல் பயன்படுகிறது. எதிர்காலத்தில் எதிர்மறைப்பொருளை உணர்த்த ஆ என்னும் எதிர்மறை இடைநிலையுடன் சேர்ந்த மாட்டா (மாட்டு + ஆ) மாட்டாள் என்னும் சொல் வருகிறது.
இளமுருகன் நேற்று வரவில்லை (இறந்தகாலம்)
விண்ணரசி இன்று வரவில்லை (நிகழ்காலம்)
இனியன் நாளை வரமாட்டான் (எதிர்காலம்)
அல்ல என்னும் சொல்லும் ஐம்பால்மூவிடத்துக்கும் முக்காலத்திலும் எதிர்மறைப் பொருளில் வருகிறது.
நான் அல்ல, நீ அல்ல, நாங்கள் அல்ல, நீங்கள் அல்ல.
அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அது அல்ல, அவை அல்ல.
(நான் அல்லேன்; நீ அல்லை; நாங்கள் அல்லேம் என்பன இலக்கண வழக்கு.)
கூற்று மாற்றம் : ஒருவர் கூறியதனையே கூற்று என்கிறோம்.
• நேர்க்கூற்று – அயற்கூற்று
ஒருவர் பேசுவது, நேர்க்கூற்று எனவும், அவர் பேசியதனைப் பிறர் வாங்கி (எடுத்து)க் கூறுவது அயற்கூற்று எனவும் கூறுவர்.
“தேன்மொழி, நூலைக் கொடு” என்று,
வளவன் கேட்டான். – நேர்க்கூற்று
நூலைத் தனக்குக் கொடுக்குமாறு தேன்மொழியை வளவன் கேட்டான். – அயற்கூற்று
ஒரு தொடரைப் பலவகைத் தொடர்களாக மாற்றுதல்
ஒரு தொடரைப் பலவகையாகவும் மாற்றலாம். எடுத்துக்காட்டாக, கதிரவன் ஓவியம் வரைந்தான் என்னும் தொடரை வெவ்வேறு தொடராக மாற்றிப் பார்ப்போம்.
கதிரவன் ஓவியம் வரைந்தான் செய்தித்தொடர் (உடன்பாடு)
கதிரவன் ஓவியம் வரைந்திலன் – செய்தித்தொடர் (எதிர்மறை)
கதிரவன் ஓவியம் வரைந்தானா – வினாத்தொடர்
கதிரவா, ஓவியம் வரை – கட்டளைத்தொடர்
கதிரவா, என்னே! உன் ஓவியத்தின் அழகு! – உணர்ச்சித்தொடர்
என மாற்றியமைக்கலாம். மேலும், அத்தொடரை ஓவியம் கதிரவனால் வரையப்பட்டது எனச் செயப்பாட்டு வினைத்தொடராகவும், கதிரவன் ஓவியம் வரைவித்தான் எனப் பிறவினைத் தொடராகவும் மாற்றலாம்.
மொழிநடை : கற்போர் உள்ளம் கவரும்வகையில் எழுதுவதே மொழிநடையாகும். மொழிநடை என்பது, தொடர்களில் உள்ள அமைப்பொழுங்கைக் குறிப்பது எனலாம். கட்டுரைகளையும் நூல்களையும் படைக்கும் படைப்பாளர்கள், தமக்கெனக் குறிப்பிட்ட ஒரு மொழிநடையைப் பின்பற்றுகின்றனர். அவர்களின் படைப்புகளில், தொடர்கள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன.
இனிய நடை, எளிய நடை, தனித்தமிழ் நடை, இலக்கிய நடை, மணிப்பிரவாள நடை, அடுக்குமொழி நடை, வினாவிடை நடை என்பன சில மொழிநடைகளாகும்.
வினாவிடை நடை : கைபுனைந்தியற்றா ஓரழகே அழியா அழகெனப்படும். கைபுனைந்தியற்றும் அழகு அழியுந்தன்மையது. கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு என்றார் நக்கீரனாரும். கையால் செய்யப்படுவது செயற்கை. கையால் செய்யப்படாதது இயற்கை. மலையும் ஆறும் காடும் கடலும் எவர் கையால் ஆக்கப்பட்டன? அவை எக்கருவிகளால் செய்யப்பட்டன? ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் எவரால் செய்யப்பட்டன? புனலுக்குத் தண்மை ஈந்தவர் எவர்? நெருப்புக்கு வெம்மையூட்டினவர் எவர்? இயல்பாக அரும்பிய இவற்றின் அழகே கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாகும். மற்றையது போலி. -முருகன் அல்லது அழகு, திரு. வி. கலியாண சுந்தரனார்
இவ்வுரைப்பகுதியில் வினா கேட்டு, அதற்கு விடை கூறுவது போன்ற தொடர்கள் அமைந்துள்ளன. பண்டைய இலக்கண உரைநூல்களில், இவ்வினா விடை நடையைப் பெரிதும் காணலாம். இதற்குத் தடைவிடை நடை என்றும் பெயர். (தாமே தடைகளை எழுப்பி, விடை கூறும் நடை). இவ்வுரைப்பகுதியின் மொழிநடைச் சிறப்பைப் பட்டியலிடுவோமா!
· சிறு சிறு தொடர்களாக அமைந்துள்ளன.
· வினாத்தொடர்கள் இடம்பெற்றுள்ளன.
· அழகு, கவின், வனப்பு என ஒரு பொருள் தரும் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
· இயற்கை – செயற்கை, புனல் – நெருப்பு, ஞாயிறு – திங்கள், தண்மை – வெம்மை என எதிர்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
· காரிருள் நீழல், தேன் பூங்கா வனம், வான் பரந்த பொழில், கான் பரந்த தூறு என அடைமொழிகள் வந்துள்ளன.
· மலையும் ஆறும் காடும் கடலும், ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் என எண்ணும்மைகள் அமைந்துள்ளன.
· ‘கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு’ என்னும் அழகிய தொடர் உள்ளது.
இவ்வாறு, இவ்வுரைப்பகுதியின் நடைச்சிறப்பை உய்த்துணரலாம். ஆகவே, நாம் பலவகை மொழிநடைகளையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அறிஞர் பலர் எழுதியுள்ள பல நூல்களையும் படித்தல் வேண்டும்.
தொடரியலுக்கு வளஞ்சேர்க்கும் விகுதிகள்: தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர், காலந்தோறும் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்களிலும் இடம்பெறத் தொடங்கின. எடுத்துக்காட்டாகச் சங்கம் மருவிய காலத்தில் ஆளர், காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் சேர்ந்து, புதிய சொற்கள் உருவாகின.
(காவலாளர் – மணிமேகலை ), (கஞ்சக்காரர் – சிலம்பு ).
பல்லவர்,சோழர்,நாயக்கர்காலங்களிலும் மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டன. நாயக்கர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காரன், காரி, சாலி ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள், இக்காலத் தொடர்களிலும் மிகுதியாகப் பயன்படுகின்றன. இவை வடமொழியோடு ஒப்புமையாக்கப்பட்ட விகுதிகளாகும். எடுத்துக்காட்டாகப் பால்காரன், வீட்டுக்காரி, வண்டிக்காரர், புத்திசாலி, பலசாலி, பொறுமைசாலி, திறமைசாலி, மேலாளர், விற்பனையாளர், உரிமையாளர், கல்வியாளர், சிந்தனையாளர் ஆகியவற்றைக் கூறலாம்.
தொடர்களையும் அவற்றிற்குரிய இலக்கண விதிகளையும் அறிந்துகொள்வது மட்டுமன்றிப் பலவகைத் தொடர்களைப் பயன்படுத்திப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் செய்வோம். மொழியின் தொடரியல் அமைப்பைப் போற்றுவோம்.
பொதுத் தமிழ் Book
TNPSC Group 2 & 2A, Group 4 & VAO- Buy Now!
Group 2&2A 2025 Online Class + Test Batch
More Details